845 total views, 2 views today
நாம் கடிகாரம் வாங்க எந்த கடைக்கு போனாலும் அவை அனைத்திலுமே நேரம் 10.10 என்றே பொதுவாக வைக்கப்பட்டிருக்கும். அது ஏன் அவ்வாறு வைக்கப்பட்டுள்ளது என்பதற்கான காரணங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.
நம் கைகளில் மொபைல் புழங்குவதற்கு முன்பெல்லாம் கடிகாரத்தை பார்த்து மட்டுமே நேரம் சொல்லி கொண்டிருந்தோம். ஆனால் செல்போன்கள் வந்த பிறகு அந்த வழக்கத்தை நாம் அடியோடு விட்டுவிட்டோம்.
எனினும் தற்போதும் வீடுகளுக்குள் சென்றால் சுவர் கடிகாரம் மாட்டாத வீடுகள் இல்லை. அது போல நேரம் பார்க்க பயன்படுத்துகிறார்களோ இல்லையோ, ஸ்டைல் மற்றும் பிராண்ட் பெயர்களுக்காகவே சிலர் கைக்கடிகாரம் பயன்படுத்துகின்றனர்.
பெண்களோ வளையல்கள் அணிவதற்கு பதிலாக கைகடிகாரம் அணிவது தங்களை ஸ்டைலாக காட்டுவதாகவும் கூறுகின்றனர்.
கை கடிகாரம், சுவர் கடிகாரம் என எந்த புது கடிகாரங்களாக இருந்தாலும் அனைத்திலுமே நிறுவன பேதமில்லாமல் 10.10 என்ற நேரத்தையே காட்டும்படி பார்வைக்கு வைத்திருப்பார்கள். இது எதற்காக என்று பலரும் மூளையை குழப்பி கொண்டிருப்பர்.
இதற்கு பல காரணங்கள் இருப்பதாக உலகம் முழுவதும் பல கருத்துக்கள் இன்றளவும் பரப்பப்பட்டு வருகிறது. அவை ஆபிரகாம்லிங்கன், கென்னடி, மார்ட்டின் கிங் லூதர் ஆகியோர் சுட்டு கொல்லப்பட்ட நேரம் இது என கூறுவர் சிலர்.
ஆனால் உண்மையாக லிங்கன் சுடப்பட்டது இரவு 10.15 நிமிடத்திற்கு, இறந்ததோ மறுநாள் காலை 7.22 நிமிடத்திற்கு. அதே போல கென்னடி சுடப்பட்டது மதியம் 12.30க்கு, நிமிடத்திற்கு. மார்ட்டின் சுடப்பட்டது மாலை 6.01க்கு சுடப்பட்டு இரவு 7.5 நிமிடத்திற்கு இறந்தார்.
அதே போல நாகசாகி மற்றும் ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்ட நேரம் என்பதால் நாசகார நேரத்தின் நினைவாக 10.10 என வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தரப்பினர் கூறுவர்.
ஆனால் நாம் ஏற்றுக்கொள்ள கூடிய வகையில் ஒரு சில காரணங்கள் கூறப்படுகிறது. அவை ஏற்றுக்கொள்ள கூடிய வகையில் தான் உள்ளன.
ஸ்மைலி லுக்:
நாம் இன்று குறுஞ்செய்தி மற்றும் வாட்ஸ்அப் அனுப்பும்போது அடிக்கடி பயன்படுத்தும் சிரித்த முகம் எனப்படும் ஸ்மைலியை நினைவூட்டும் வகையில் தான், கடிகாரத்தில் 10.10 மணி வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
வெற்றிக்குறியா இருக்குமோ.?
வெற்றியைக் குறிக்கும் “வி” என்ற எழுத்தை ஒத்திருக்கும் வகையில் நம் கைகளை அந்த வடிவத்தில் காட்டுவோம். எனவே வெற்றிக்குறியை குறிக்கும் பொருட்டு கிட்டத்தட்ட அந்த ஷேப்பை நினைவுபடுத்தும் வகையில் 10.10 என்று நேரம் வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
வியாபார யுக்தியே காரணமா ?
மேற்கண்ட காரணங்களை விட இந்த காரணங்களே அனைவராலும் ஏற்று கொள்ளக்கூடியதாக உள்ளது.
அவை என்னவெனில்
1. விற்பனைக்கு வைக்கப்படும் கடிகாரத்தினுள் உள்ள எல்லா முட்களும் நன்றாக காட்சிப்படுத்தப்பட வேண்டும்
2. கடிகார முட்கள் நேராகவோ அல்லது ஒன்றன் மேல் ஒன்றாகவோ இருப்பின் அதிலுள்ள எல்லா முட்களும் தென்படுவது கடினம். இன்னும் சில கடிகாரங்களில் தேதி உள்ளிட்ட பல தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும். கடிகார முட்கள் அவற்றை மறைக்க கூடாது.
3. இதை எல்லாம் விட முக்கியமாக கடிகாரங்களை தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர் மற்றும் இதர முக்கிய விவரங்களை கடிகாரத்தின் நடுவிலோ அல்லது சற்று மேலோ கொடுத்தால் அது, தெள்ளத்தெளிவாக வாடிக்கையாளர்களுக்கு தெரியும் என்பதே, 10.10 நிமிடத்திலேயே புது கடிகாரங்கள் காட்சிப்படுத்தப்படுவதற்கு காரணம்.. இதையே பெரும்பாலானோர் நம்புகின்றனர்…