162 total views, 2 views today
எங்களுடன் மாவீரர் தின நிகழ்வுகளில் கலந்துகொண்ட ஒரே காரணத்திற்காக சிவகரன் தன் மீது முழு பிரச்சினைகளையும் போட்டுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என சமூக செயற்பாட்டாளர் அலன் றொக்ஸ் தெரிவித்துள்ளார்.
தான் உட்பட பலருக்கு நீதிமன்றம் விதித்துள்ள தடை தொடர்பில் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மாவீரர் நாள் அனுஷ்ட்டிப்புக்கு சில நபர்களுக்கு மன்னார் மற்றும் வவுனியா நீதிமன்றங்கள் தடை விதித்திருப்பதாக காவற்துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண கடந்த 19-ம் திகதி தெரிவித்திருந்தார்.
இதன்படி மன்னார் மாவட்டத்தில் 5 பேருக்கும், வவுனியாவில் 8 பேருக்கும் இந்த நினைவேந்தலில் ஈடுபட தடை விதிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
மன்னார் பொலிஸார் கடந்த வியாழக்கிழமை காலை மன்னார் நீதிமன்றத்தில் எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை தொடக்கம் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையான காலப்பகுதியில் மாவீரர் தினத்தை நினைவு கூறக் கூடாது எனவும், மன்னார் நீதிமன்ற நியாயதிக்க எல்லைக்குள் மாவீர் தினத்தை நினைவு கூறுவதை தடுக்கும் வகையில், மன்னார் பொலிஸார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் வெய்து தடை உத்தரவை பெற்றுள்ளனர்.
அந்த வகையில் கடந்த காலங்களில் மாவீரர் நாள் நினைவு தினத்தை ஒழுங்குபடுத்திய சமூக செயற்பாட்டாளர் அலன் றொக்ஸ், வன்னி மாவட்ட பராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், பங்குத்தந்தை சுரேந்திரன் ரவல், இந்த நினைவு நிகழ்வுகளுக்கு உதவிய அன்ரன் றொஜன் ஸ்ராலின், மற்றும் மாவீரர் நாள் தினத்தில் இவர்களுடன் சென்று விளக்கேற்றிய வி.எஸ்.சிவகரன் ஆகிய 5 பேருக்கும் எதிராக குறித்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பான எழுத்துமூல உத்தரவு கடிதம் இன்றுதான் எனது கையில் கிடைத்ததாக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த ஒருவர் எமக்கு தெரிவித்திருந்தார்.
மேலும் பொலிஸார் நீதிமன்றத்தை தவறான முறையிலே தொடர்ச்சியாகவே உபயோகித்து வருகின்றனர். மாவீரர் தினத்துடன் சம்மந்தம் இல்லாதவர்களுக்கு எல்லாம் தடை உத்தரவு பெற்றிருக்கின்றார்கள். கோயிலில் கஞ்சி காய்ச்ச ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அருட்தந்தை ஒருவர் உட்பட ஐவருக்கு மன்னார் நீதிமன்றம் தடை உத்தரவிட்டுள்ளது.
என்னைத் தவிர ஏனைய நான்கு பேரும் மாவீரர் தினத்துடன் சம்மந்தம் இல்லாதவர்கள். நீதிமன்றத்தின் நேரத்தையும், நீதிமன்றத்தையும் இந்த பொலிஸார் தவறான வழிகட்டுதல் செய்கின்றனர் என நேற்றைய தினம் மன்னாரில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் தடை விதிக்கப்பட்டிருந்தவர்களில் ஒருவர் தெரிவிக்கும்போது, என்னைத் தவிர ஏனைய நான்கு பேரும் மாவீரர் தினத்துடன் சம்மந்தம் இல்லாதவர்கள் என சிவகரன் தெரிவித்திருப்பது ஒருவேளை நான் உட்பட மற்றவர்களை காட்டிக்கொடுக்க கூடாது என நினைத்து சொல்லியிருக்கலாம்.
ஆனால் நாங்கள் கடந்த காலங்களில், எமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த மக்களை ஒருங்கிணைத்ததையோ, மாவீரர் தின நினைவு நிகழ்வுகளை தலைமை தாங்கி நடத்தியதையோ மறுக்க விரும்பவில்லை. மறுக்குமளவிற்கு நாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை, இதற்காக எங்களுடன் மாவீரர் தின நிகழ்வுகளில் கலந்துகொண்ட ஒரே காரணத்திற்காக சிவகரன் தன் மீது முழு பிரச்சினைகளையும் போட்டுக்கொள்ள வேண்டாமென்பதுடன் அனைவரும் இணைந்து வரும் பிரச்சினைகளை எதிர்கொள்வோம்.
மேலும் இன்னும் சொல்லப்போனால் கடந்த கால நல்லாட்சி அரசாங்கத்தில் நாங்கள் மாவீரர் தின நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதற்கு எந்த தடையுமிருக்கவில்லை, இம்முறைதான் இவ்வாறு எங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, இதை எப்படி எதிர்கொள்வதென்பதுபற்றி கலந்தாலோசித்து வருகின்றோம் என சமூக செயற்பாட்டாளர் அலன் றொக்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.